தொடரை வெல்லுமா இந்தியா: நியூசி., யுடன் இரண்டாவது மோதல் | ஜனவரி 20, 2023

தினமலர்  தினமலர்
தொடரை வெல்லுமா இந்தியா: நியூசி., யுடன் இரண்டாவது மோதல் | ஜனவரி 20, 2023

ராய்ப்பூர்: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி இன்று சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடக்கவுள்ளது. 

இந்திய அணியில் கேப்டன் ரோகித் உடன் துவக்கம் தர சுப்மன் கில் உள்ளார். கடந்த போட்டியில், இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சுப்மன் படைத்தார். ஐதராபாத் போட்டியில் ஒற்றை இலக்கில் வெளியேறிய கோஹ்லி இன்று எழுச்சி பெறலாம். இஷான் கிஷான் கிடைத்த வாய்ப்பை வீணடிக்க கூடாது. அடுத்த ‘மிஸ்டர் 360’ என அழைக்கப்படும் சூர்யகுமார் உடன் ஹர்திக் பாண்ட்யா ஒத்துழைப்பு தந்தால் தொடரை 2–0 என எளிதாக வெல்லலாம்.

வருவாரா உம்ரான்

இந்தியாவின் பந்துவீச்சு கவலை தருகிறது. கடந்த போட்டியில் ஷமி (69 ரன்), பாண்ட்யா (70), ஷர்துல் தாகூர் (54) ரன் வள்ளலாக மாறினர். கடைசி கட்ட ஓவர்களில் விக்கெட் வீழ்த்த திணறியதால், வெற்றிக்கு கடைசி வரை போராடியது. சிராஜ் தனி ஆளாக முத்திரை பதித்தார். 10 ஓவரில் 46 ரன்கள் மட்டும் வழங்கிய இவர் 4 விக்கெட் சாய்த்தார். ஷர்துல் தாகூருக்குப்பதில் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கை களமிறக்கலாம். ‘சுழலில்’ தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றினாலும், குல்தீப் நம்பிக்கை அளிக்கிறார். 

மிரட்டும் கூட்டணி

முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் கான்வே, நிக்கோல்ஸ், கேப்டன் லதாம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சொதப்பினர். ஆனால், எதிர்பாராதவிதமாக பிரேஸ்வெல், சான்ட்னர் கூட்டணி மிரட்டியது. கடைசி கட்டத்தில் இரண்டு ‘ஆல் ரவுண்டரும்’ இந்திய அணிக்கு தொல்லை கொடுத்தனர். சதம் கடந்த பிரேஸ்வெல் மீண்டும் மிரட்டலாம். பந்துவீச்சில் ஷிப்லே, பெர்குசன், டிக்னெர் சாதிக்க முயற்சிக்கலாம்.

போட்டி நடக்கவுள்ள ராய்ப்பூரின் இன்றைய வானிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 31, குறைந்தபட்சம் 14 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர வாய்ப்பில்லை. 

இதுவரை...

இரு அணிகளும் இதுவரை 114 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இந்தியா 56 வெற்றி, 50 தோல்வி பெற்றுள்ளது. ஒரு போட்டி ‘டை’ ஆனது. 7 போட்டிக்கு முடிவு இல்லை. 

முதல் முறை

ராய்ப்பூரின் சாகித் வீர் நாராயண் சிங் மைதானத்தில், முதல் முறையாக சர்வதேச போட்டி நடக்கவுள்ளது. 65 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம். 60 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

வீரர்களுக்கு அபராதம்

முதல் போட்டியில், இந்திய அணி தாமதமாக பந்துவீசியது. இதனால், வீரர்கள் போட்டி சம்பளத்திலிருந்து 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

 

 

 

மூலக்கதை